சனாதன சர்ச்சை வழக்கு: உதயநிதி மனு மே 6-க்கு ஒத்திவைப்பு!

சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த ரிட் மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் மற்றும் சித்தாலே ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகி, ராஜஸ்தானில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் எஃப்.ஐ.ஆர் / சம்மன்கள் தொடர்பான தொகுப்பினை தாக்கல் செய்யவும், எஃப்.ஐ.ஆர்களை இணைக்கவும், மாற்றவும் உச்ச நீதிமன்றத்துக்குள் உள்ள அதிகாரம் குறித்த சமர்ப்பிப்பு குறிப்பினை தாக்கல் செய்யவும் கால அவகாசம் கோரினர்.

அப்போது, ‘அனைத்து எஃப்.ஐ.ஆர் / புகார்களையும் ஒன்றிணைத்து மாற்றுவதற்கு பிரிவு 32-இன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பைப் பயன்படுத்த முடியுமா அல்லது பிரிவு 406, CrPC-ன் கீழ் பயன்படுத்த முடியுமா?’ என்று நீதிமன்ற அமர்வு கேள்வியெழுப்பியது.

அதற்கு, நுபுர் சர்மாவுக்கு பொருந்தும் சட்டம் உதயநிதி ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்று கூறிய அபிஷேக் மனு சிங்வி, அடுத்த விசாரணையின்போது, நீதிமன்ற அமர்வு எழுப்பிய கேள்விக்கு பதிலளிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று பேசியிருந்தார். இதையடுத்து, அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.