வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக புகார்!

கடலூரில் எதிர்க்கட்சிகள் மீதுவெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் புகார் அளித்த பின், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடலூர் தேர்தல் பிரச்சாரத்தில், அமைச்சர் உதயநிதி எதிர்க்கட்சிகளை சிறுமைப்படுத்தியும், மிரட்டும் விதமாகவும் பேசியுள்ளார். தேர்தலில் அரசின் சாதனைகளை கூறி வாக்கு கேட்கலாம். அல்லது எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிகள்படி உதயநிதி பேசியது தவறு. இதுதவிர தொண்டர்களுக்கு இடையில் வெறுப்பை தூண்டும் விதமாக ஒரு அமைச்சரே கூறினால், அதை எப்படி ஏற்க முடியும்.

கட்சிகளின் கொள்கைகள், எதிர்க்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டலாம். ஆனால், அரசியலமைப்பின் பால் உறுதிமொழி எடுத்துக் கொண்ட அமைச்சர் பேசியது தவறு. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அனுமதியளிக்க கூடாது என்றும் தெரிவித்து புகார் அளித்துள்ளோம். நடத்தை விதிகள் வந்தபின் தேர்தல் அதிகாரிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.