பாஜகவினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகளை கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும் என்று சீமான் கூறினார்.
தேனி தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கம்பம், அல்லிநகரம், உசிலம்பட்டியில் பேசியதாவது:-
எந்த தேசத்திலாவது அரசே மதுவை விற்கிறதா? அறிவை வளர்க்கும் கல்வி நிலையங்களையும், நோய் நீக்கும் மருத்துவமனைகளையும் தனியார் வசம் கொடுத்து விட்டு அறிவை அழிக்கும் மதுவை இன்றைக்கு அரசு விற்று கொண்டிருக்கிறது.
பாஜகவினர் என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தைகளை கூறினர். அங்கு சேர்ந்திருந்தால் ரூ.500 கோடியும், 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். அவர்களுடன் கூட்டணி வைத்ததால் டிடிவி தினகரனுக்கும், வாசனுக்கும் அவர்களது சின்னம் கிடைத்து இருக்கிறது. எனக்கு கிடைக்கவில்லை. பாஜகவின் கட்சி அலுவலகமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு ஞாபகம் வருகிறது. தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள், நாங்களே பாஜகவுக்கு வாக்கு அளிக்கிறோம். எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. தேசிய கட்சிகளுக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள். எங்களுக்கு வாக்கு அளிக்காவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோர் சிறை செல்ல காரணமாக இருந்தவர்கள் பாஜகவினர். அவர்களுடன் இன்றைக்கு டிடிவி தினகரன் கூட்டணி வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.