நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல் முருகன் மீது வழக்கு பதிவு!

நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல் முருகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் மீது போலீசார் இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த முறை தமிழகத்தில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. எல்லா தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் நடக்கிறது. மக்களைக் கவரவும் வாக்காளர்கள் மனதில் இடம் பெறவும் பல்வேறு பிரச்சார உத்திகளையும் வேட்பாளர்கள் கையாண்டு வருகிறார்கள். நீலகிரி லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை அங்கே பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். இதற்கிடையே அவர் மீது இப்போது சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் உரிய அனுமதி பெறாமல் சத்தியமங்கலம் மைசூர் சாலையில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் 100 பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டம் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடத்தப்பட்டதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கிளாஸ் ரூமை திறந்து வைக்கவே எல் முருகன் வந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கர் இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசாிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்ட 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் 25ஆம் தேதியும் பாஜகவின் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நீலகிரி கடநாடு சமுதாயக்கூடம் அருகே எந்தவொரு அனுமதியும் வாங்காமல் கூட்டம் ஒன்றை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சூழலில் தான் மீண்டும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.