விஷப் பாம்பைக் கூட நம்பலாம்.. பாஜகவை நம்ப முடியாது: மம்தா பானர்ஜி!

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “விஷப் பாம்பை கூட நம்பலாம். ஆனால், பாஜகவை நம்ப முடியாது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூச் பெஹரில் இன்று வியாழக்கிழமை பிரச்சாரத்தில் பேசியதாவது:-

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் மீண்டும் பெயரினை பதிவு செய்யுமாறு பாஜக கேட்கிறது. ஏன் இப்போது பெயரைப் பதிவு செய்யவேண்டும்? அவர்கள் அதிகமான பதிவுகளை விரும்புகிறார்கள். அப்போதுதான் அதனை நிறுத்த முடியும். நீங்கள் ஒரு விஷப் பாம்பைக் கூட நம்பலாம். அதனைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாம். ஆனால், பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது. பாஜக நாட்டையே அழித்து வருகிறது.

மத்திய புலனாய்வு அமைப்புகள், என்ஐஏ, வருமான வரித் துறை, பிஎஸ்எஃப், சிஐஎஸ்எஃப் போன்றவை பாஜகவின் கட்டளைப்படி செயல்பட்டு வருகின்றன. மத்திய அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால், ஒரு சமமான களம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக ‘ஒரே நாடு ஒரே கட்சி’ என்ற கொள்கையை பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.