காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர். அதில், நீட் தேர்வு கட்டாயமில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-
அடிமை அதிமுக அடகு வைத்த, பாசிச பாஜக பறித்த தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
நாம் வலியுறுத்திய வாக்குறுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி, மாநிலக் கட்சியான தி.மு.க.வால் நிறைவேற்ற முடியுமா எனக் கேள்வி எழுப்பியோருக்கான தக்க பதிலாக அமைந்துள்ளது காங்கிரஸ் வெளியிட்டுள்ள 2024 தேர்தல் அறிக்கை.
அதனால்தான் சொல்கிறோம்! இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; கொள்கையால் ஒன்றிய கூட்டணி!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.