பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபருடன் சாய் பிரசாத் தொடர்பில் இருந்ததாக தகவல் கிடைத்த நிலையில் சாய் பிரசாத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி, ஐடிபிஎல் ரோட்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மற்றும் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் ஈடுபட்ட மர்ம நபரின் புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சார்பிலும் மர்மநபரின் வரைபடம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் மர்மநபர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பெங்களூர் ஹோட்டலில் குண்டுவெடிப்பு நடந்து ஒருமாதம் ஆகியும் முக்கிய குற்றவாளி கைது செய்யப்படவில்லை. ஹோட்டல் மற்றும் அரசு பஸ்களில் மர்மநபர் பயணம் செய்த போது கண்காணிப்பு கேமராக்களில் சிக்கிய காட்சிகள் மூலமாக, அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து துமகூருவுக்கும், அங்கிருந்து பல்லாரிக்கும், பின்னர் கலபுரகி மாவட்டத்திற்கும் மர்மநபர் சென்றிருந்தார். கலபுரகியில் இருந்து ஐதராபாத்திற்கு மர்மநபர் சென்றிருப்பதற்கான தகவல்கள் தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்திருந்தது. அதன்பிறகு மர்மநபர் எங்கு சென்றார்? தற்போது அவர் எங்கு தலைமறைவாக இருக்கிறார்? என்பது தெரியவில்லை. மர்மநபரை பிடிக்க தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
குண்டுவெடிப்பு வழக்கில் அதிரடி திருப்பமாக குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த ஒருவர் கடந்த மாதம் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அதாவது பெங்களூரில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டு, கடந்த 1-ஆம் தேதி இரவு 9 மணியளவில் பல்லாரிக்கு மர்மநபர் சென்றிருந்தார். இதையடுத்து பல்லாரி பேருந்து நிலையம், அதை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாக மர்மநபரை தேடும் பணி நடந்தது. அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டிடத்திற்கு மர்மநபர் செல்வதும், அங்கு வைத்து தான் அணிந்திருந்த சட்டையை கழற்றிவிட்டு, வேறு சட்டையை அணிந்து வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அதே நேரத்தில் வணிக வளாகத்தில் உள்ள கேமராவில் மர்மநபர் ஒருவரிடம் சில நிமிடங்கள் பேசும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதையடுத்து, மர்மநபருடன் பேசிக் கொண்டிருந்த நபரை பிடிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, பல்லாரி மாவட்டம் கவுல்பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சபீர் என்பவரை கைது செய்தனர். அவரை உடனடியாக பல்லாரியில் இருந்து பெங்களூருக்கு அழைத்து வந்தனர். பெங்களூருவில் ரகசிய இடத்தில் வைத்து சபீரிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர் பல்லாரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் கைதான சபீரிடம், குண்டுவெடிப்பு குற்றவாளி பற்றியும் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஷிவமோகா, பெல்லாரி சிறைச்சாலைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிவமோகா பகுதியில் இருந்து இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்திருந்தனர். இதற்கிடையே, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று சாய் பிரசாத்திடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.