வலிமையான பிரதமர் நாட்டை ஆண்டால்தான், வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து சித்தோடு பகுதியிலும், திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து கவுந்தப்பாடியிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
வலிமையான பிரதமர் நாட்டை ஆண்டால்தான், வளமான தமிழகத்தை உருவாக்க முடியும். இன்றைய தேர்தலில் வாக்கு செலுத்துவதற்கு முன்பே யார் பிரதமர் என்று தெரிந்து விட்டது. எனவே, நமது வாக்குகள் பிரதமரை வலுப்படுத்த வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிக்கு வாக்களித்து வீணாக்கக்கூடாது.
வரி வருவாயில் தமிழகத்துக்கு ரூபாய்க்கு 29 பைசா தருகிறது என்றால், மறைமுகமாக தமிழகத்துக்கு கோடிக் கணக்கில் வழங்குகிறது. தமிழகத்தில் போதை கலாச்சாரம் பெருகி விட்டது. கிராமங்களில் கூட கஞ்சா கிடைக்கிறது. பால்விலை, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவைப் பொறுத்தவரை கோபாலபுரம் வளர்ந்தால் போதும் என்று நினைக்கின்றனர். தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் ஒருவர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை. ஆனால் தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.