இவிஎம் குறைபாடுகளை களைய உத்தரவிட கோரிய வழக்கு ஜூன் 25-க்கு ஒத்திவைப்பு!

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவில், நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில், மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் இந்த இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். சமீப காலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பி வருகிறது. வாக்குபதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் (control unit),வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் (ballot unit) இடையில் அச்சு இயந்திரம் (VVPAT) வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது. இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “ஓட்டுக்கு ஒப்புகைச் சீட்டை எண்ணுவது குறித்து தேர்தல் அதிகாரி முடிவெடுக்க அதிகாரம் உள்ள போதும், அது தொடர்பான விதிகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தற்போது வழக்கு தாக்கல் செய்துள்ளது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், “எதிர்கால தேர்தல்களை கருத்தில் கொண்டுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “மூன்றாம் தலைமுறை வாக்குப்பதிவு இயந்திரம் 2013-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே இயந்திரங்கள்தான் பயன்படுத்த்ப்பட்டன. அந்த தேர்தலில் மனுதாரர் கட்சி வெற்றி பெற்றது. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றால் அது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்போதைய தேர்தலுக்காக இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கை பின்னர் பரிசீலிக்கலாம் எனக் கூறி, விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.