தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வி.சி.க. முயற்சித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி வி.சி.க. வேட்பாளருமான திருமாவளவன் தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அங்கீகாரம் பெறாத கட்சியாக இருப்பதால் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடுகிறது’ என்று தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
2 தொகுதிகளில் வெற்றி பெற்றால் நாங்களும் அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறுவோம். எதிர்கால அரசியல் எங்களுக்கு எளிதாக இருக்கும். இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சியாக இருப்பதால் பல நெருக்கடிகளை நாங்கள் சந்திக்க நேரிடுகிறது. ஒரு முறையாவது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று முயற்சிக்கிறோம். அந்த முயற்சி இந்த தேர்தலில் கைகூடும் என நான் நம்புகிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.