அந்தாள் ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம், அவர் பெயரை எல்லாம் சொல்லாதீங்க என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும், எதிர் தரப்பினரை கடுமையாக விமர்சித்து பிரச்சாரக் களத்தில் பேசி வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பிரதமர் மோடியை 29 பைசா மோடி என குறிப்பிட்டு பேசி வருகிறார். அதற்கு பதிலடியாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலினை கஞ்சாநிதி என்று அழைக்க வேண்டும் எனப் பேசி இருந்தார். இதனால், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை இடையே வார்த்தை மோதல்கள் வலுத்துள்ளன. பிரச்சாரக் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். தஞ்சாவூர் தொகுதி பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது திமுக தொண்டர்கள் குரல் எழுப்பினர். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் “அந்த ஆள் பெயரை எல்லாம் சொல்லாதீங்க.. அந்தளவுக்கு அந்த ஆள் வொர்த்தே கிடையாது.. ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம்” என விமர்சித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுகு பாஜகவினர் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்யும்போது, இதுபோன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைக்கலாமா என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.