மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை: பிரியங்கா காந்தி!

நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்பான தேர்தல் ஆணையம் பலவீனமடைந்துள்ளது என்றும், மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு சலசலப்புகள எழுந்திருக்கின்றன. இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரியங்கா காந்தி மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார். அவர் பேசியதாவது:-

இன்று நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் இருக்கிறது. இதனை போக்க மோடி அரசு என்ன செய்தது? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்று கூறிய பாஜக, இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் சாக்கு சொல்லி வருகிறது. அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் அவர்கள் இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள். மறுபுறம் விவசாயிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் மோடி கண்டுக்கொள்ளவில்லை.

இன்று நம்முடைய ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. காரணம், ஜனநாயகத்தை பலப்படுத்த உருவாக்கப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையம் பலவீனமடைந்துள்ளது. மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் விவிபி ஒப்புகை சீட்டு தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பிரியங்கா காந்தி பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.