ஜனவரி, பிப்ரவரியை தவிர தமிழகத்தில் அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டனர் என்று நடிகர் சிங்கமுத்து கூறினார்.
சிவகங்கை அருகே மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து சிங்கமுத்து பேசியதாவது:-
திமுக ஆட்சியில்தான் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு வந்தன. தமிழக மக்களை போதைக்கு அடிமையாக்கிவிட்டனர். பள்ளி மாணவர்கள் கையில் கஞ்சா உள்ளது. திமுக ஆட்சியில் பலரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் சென்றுவிட்டனர். இதனால், அதிமுக எப்போது ஆட்சிக்கு வரும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எப்போதும் பெண்களைச் சார்ந்தே திட்டங்களை நிறைவேற்றினார். ஆனால், திமுக பொதுமக்களிடம் வசூலிக்கும் வரிப் பணத்தில், மக்களுக்கு நன்மை எதுவும் செய்வதில்லை. நாம் பேருந்தில்கூட செல்ல முடியவில்லை. ஆனால், திமுககாரர்கள் ஒவ்வொருவரும் 10 கார்கள் வைத்துள்ளனர்.
பொய்யான வாக்குறுதியை நம்பி திமுகவுக்கு வாக்களித்து, ஏமாந்துவிட்டீர்கள். கடனைத் தள்ளுபடி செய்வார்கள் என்று கருதி, நகைகளை அடகு வைத்தனர். திமுகவைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் தள்ளுபடி செய்ததால், அடகு வைத்த நகைகளைத் திருப்ப முடியவில்லை. ஜனவரி, பிப்ரவரியை தவிர, தமிழகத்தில் அனைத்து வரிகளையும் ஏற்றிவிட்டனர். இந்தியா மற்றும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, அதிமுகவை ஆதரிக்க வேண்டும். அதிமுக கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.