தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஒரே கட்சி அதிமுக தான்: காயத்ரி ரகுராம்!

அதிமுக கரூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த காயத்திரி ரகுராம், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் மிகத் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. அதன்படி கரூர் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தங்கவேலுவை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் செய்தார். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசியதாவது:-

பாஜகவும் சரி, திமுகவும் சரி தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளாகக் கரூர் லோக்சபா எம்பியாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி.. அவர் கரூர் மக்களுக்காக ஒரே ஒரு முறை கூட லோக்சபா பேசவே இல்லை. இப்போது மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடும் அவர், வெற்றி பெற வேண்டும் என்பதால் கண்ணீர் வடிக்கிறார். அவர் அடுத்த 5 ஆண்டுகள் வீட்டுக்குள் இருப்பது தான் நல்லது.

தமிழக பாஜக தலைவர் கரூரைச் சேர்ந்தவர் தான். ஆனால் இங்கே போட்டியிட்டால் வெல்ல முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.. இதன் காரணமாகவே அவர் கோவையில் போட்டியிடுகிறார். வெறும் தகர டப்பாவுடன் கோவைக்குச் சென்றேன் என்ற அண்ணாமலை நிச்சயம் கோவை தொகுதியிலும் வெல்லப் போவதில்லை. தேர்தலில் தோல்வியடைந்த பிறகு அவர் மீண்டும் கர்நாடகா செல்லப் போகிறார்.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு ஏகப்பட்ட நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் இந்த திமுக ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள். இப்போது வெறும் 30% மக்களுக்கு மட்டும் உரிமை தொகையைக் கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள். ஆட்சிக்கு வரும் முன்பு நீட் தேர்வை ரத்து செய்வோம். ரகசியம் இருக்கு என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இத்தனை காலம் ஆகிவிட்டது இன்னும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. மாணவர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றியே வருகிறார்கள். இதுவரை மக்களை ஏமாற்றாமல் ஆட்சி நடத்திய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே.

அதிமுக ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்து ஏகப்பட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 இட ஒதுக்கீடு எனப் பலவற்றை சொல்லலாம். குறிப்பாக இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை எடப்பாடி பழனிசாமி தான் கொண்டு வந்தார்.

தமிழ்நாட்டில் இப்போது போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி விட்டார்கள். இதனால் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிக்கும்.. போதைப் பொருள் விவகாரத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரி வருவாய் 3 மடங்கு அதிகரித்துள்ளது.. ஆனாலும் திமுகவினர் தாலிக்குத் தங்கம், மகளிர் திருமண உதவித்தொகை என எல்லா நல்ல திட்டங்களையும் நிறுத்திவிட்டார்கள். இது குறித்து கரூர் லோக்சபா எம்பி ஜோதிமணியால் திமுக அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா? அதிமுகவைச் சேர்ந்தவர் இருந்தால் துணிச்சலாகக் கேள்வி கேட்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஒரே கட்சி அதிமுக தான். இவ்வாறு அவர் பேசினார்.