பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் முத்திரைக் கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததைக் கண்டித்து, அவர் மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நானும் எனது சகாக்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கேரா, குர்தீப் சப்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் பிரதமர் மீது இரண்டு புகார்கள் உள்பட 6 புகார்களைக் கொடுத்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகார்களின் பிரதிகளையும் பகிர்ந்து, “தேர்தல் வேளையில் அனைத்துக் கட்சிகளின் சமத்துவத்தை உறுதி செய்வதில் தனது சுதந்திரமான அதிகாரத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டிய தருணம் இது. தேர்தல் ஆணையம் அதன் அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களது தரப்பில் இருந்து நாங்கள் இந்த பாஜக ஆட்சியினை மக்கள் முன் அம்பலப்படுத்த அரசியல், சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம்” என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடி கடந்த வாரம் ஷஹரான்பூர், ஆஜ்மீரில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் முத்திரையுடன் இருக்கிறது. அது சிறுபான்மையினரை சமாதானப்படுத்தும் அரசியலை செய்கிறது” என விமர்சித்திருந்தார். தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) சத்தீஸ்கரில் நடந்த பிரச்சாரத்திலும் அதே கருத்தை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் இது குறித்து கூறும்போது, “பிரதமர் மோடியின் உரைகள் எங்களை ஆழ்ந்த வருத்தம் கொள்ளச் செய்கிறது. எங்களது தேர்தல் அறிக்கை பற்றி அவர் பேசுவதெல்லாம் புளுகு மூட்டைகள். நீங்கள் ஒரு கட்சியுடன் வாக்குவாதம் செய்யலாம். அதன் தேர்தல் வாக்குறுதிகளையும் விமர்சிக்கலாம். ஆனால் பல்வேறு தேசிய இயக்கங்களை முன்னெடுத்த தேசியக் கட்சி மீது இத்தகைய விமர்சனத்தை வைக்கலாமா? நாங்கள் மிகவும் நேர்த்தியான தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கும் சூழலில், அதை புளுகு மூட்டை என்று விமர்சிக்கலாமா? எங்களது வருத்தத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நாங்கள் வேண்டியுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.