நான் மாட்டிறைச்சி உண்பதில்லை; வதந்திகளைப் பரப்பாதீர்: கங்கனா ரனாவத்

“நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை. என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வெட்கக்கேடானது” என நடிகையும், பாஜக மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் “நான் பல ஆண்டுகளாக யோகா, ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு அதை பிறருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். இப்போது வதந்திகளைப் பரப்பும் முயற்சியால் எனது பிம்பம் சிதையாது. எனது தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒரு பெருமித இந்து என்பதை அவர்கள் அறிவார்கள். எதுவும் என்னைப் பற்றி அவர்கள் தவறாக நினைக்கும்படி செய்யாது. ஜெய் ஸ்ரீ ராம்” என்று பதிவிட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இதற்காக மண்டி தொகுதியில் அவர் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே மோடி அரசை ஆதரித்தும், இந்துத்துவா கொள்கைகளை தூக்கிப் பிடித்தும் அவர் பதிவிடும் சமூகவலைதளப் பதிவால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அந்தப் போக்கு நீள்கிறது. அந்தவகையில், அண்மையில் கூட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர் நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ்தான். நேரு அல்ல என்று பேசி புதிய சர்ச்சையில் சிக்கினார். அது ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள் அவரைப் பற்றி காங்கிரஸ் பிரமுகர் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்து கங்கனா மீண்டும் ஊடக கவனம் பெற்றுள்ளார்.

முன்னதாக மகாராஷ்டிரா காங்கிரஸ் பிரமுகர் விஜய் வடேட்டிவார் காட்சிரோலியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசுகையிக், கங்கனா ரனாவத் ஒரு முறை எக்ஸ் தளத்தில் தனக்கு மாட்டிறைச்சி பிடிக்கும். அதைச் சாப்பிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார் என்று பேசியிருந்தார். மேலும் இத் தேர்தலில் பாஜக ஊழல்வாதிகளை தேடி சீட் வழங்கியுள்ளது என்றும் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் “நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை. என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வெட்கக்கேடானது.” என நடிகையும் பாஜக மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.