பா.ஜனதாவில் சேருங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று தங்கள் கட்சியினரை மிரட்டுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், புருலியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று மம்தா பானர்ஜி பேசியதாவது:-
அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), வருமான வரித் துறை ஆகிய மத்திய விசாரணை அமைப்புகள், பாஜகவின் ‘ஆயுதங்களாக’ செயல்படுகின்றன. திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை துன்புறுத்தும் இந்த அமைப்புகள், திடீரென வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து சோதனை நடத்துகின்றனா். இரவில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், வீட்டுக்குள் யாரேனும் நுழைந்தால் பெண்கள் என்ன செய்வா்?
பாஜகவில் இணையாவிட்டால், தங்களது நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவா்களை விசாரணை அமைப்புகள் மிரட்டுகின்றன. திரிணமூல் தலைவா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க இதுவரை 136 விசாரணை குழுக்களை மாநிலத்துக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. அந்த விசாரணைகளில் கண்டறியப்பட்டது என்ன? என்பது குறித்து அவா்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ராம நவமி விழாவின்போது, வகுப்புவாத மோதல்களைத் தூண்ட பாஜக முயற்சிக்கிறது. அவா்களின் சதிவலையில் மக்கள் சிக்கிவிடக் கூடாது.
பெண்களை கடவுளாக வழிபடும் மேற்கு வங்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ‘முதலைக் கண்ணீா்’ வடிக்கிறது பாஜக. ஆனால், மணிப்பூரில் பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் குறித்து அவா்கள் வாய்திறப்பதில்லை. இம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் ‘கைகோத்து’ செயல்படுகின்றன. பாஜக போன்ற ஜனநாயக விரோத சக்தியை வீழ்த்த வேண்டுமெனில், திரிணமூல் காங்கிரஸை மக்கள் ஆதரிக்க வேண்டும். மக்களின் உரிமைகள், சுதந்திரத்தை பறிக்கும் பாஜக போல் அல்லாமல் ஒவ்வொருவரின் உரிமையையும் உறுதிசெய்வதில் நம்பிக்கை கொண்டது திரிணமூல் காங்கிரஸ்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கான நிதியை மேற்கு வங்கத்துக்கு அளிக்க மத்திய பாஜக அரசு மறுத்துவிட்டது. எனவே, ஏழைகள் வீடு கட்டுவதற்காக, மாநில அரசே ரூ.1.2 லட்சம் கோடி நிதியை வழங்கவுள்ளது. இந்த நிதியை இப்போது வழங்க தோ்தல் ஆணையம் அனுமதி அளிக்கவில்லை. எனவே, மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு மம்தா பானா்ஜி பேசினார்.
மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிபூா் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில், அங்கு திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் மனோபிரதா ஜனா உள்பட இருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சனிக்கிழமை கைது செய்தது. இந்த நடவடிக்கையின்போது, என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அவா்கள் வாகனத்தின் மீது உள்ளூா் மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு அதிகாரி காயமடைந்தாா்.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் மனைவி அளித்த புகாரில், என்ஐஏ அதிகாரிகள் மீது மாநில காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, தனது கண்ணியத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாகவும், பொருள்களை சேதப்படுத்தியதாகவும் புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354-ஆவது பிரிவின்கீழ் (பெண்ணின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான தாக்குதல்) என்ஐஏ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதனிடையே, கிழக்கு மேதினிபூரில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த தீய நோக்கமும் இல்லை; இதுதொடா்பான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை’ என்று என்ஐஏ விளக்கமளித்துள்ளது.