ஆந்திரப் பிரதேச தேர்தலுக்காகத் தெலுங்கு தேசம் கட்சி ரொம்பவே வினோதமான ஒரு வாக்குறுதியை முன்வைத்துள்ளது. அதாவது தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை வழங்குவோம் என்பதை அக்கட்சி வாக்குறுதியாகக் கொடுத்துள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அங்குள்ள குப்பம் என்ற சட்டசபை தொகுதியில் போட்டியிடும் நிலையில், அங்கே அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தான் அவர் ரொம்பவே வினோதமான இந்த வாக்குறுதியை அளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “40 நாட்களுக்குப் பிறகு (தேர்தல் முடிந்து தெலுங்கு தேசம் ஆட்சியை அமைத்த பிறகு) தரமான மதுபானம் கிடைப்பதை உறுதி செய்வோம். அதுவும் தரமான மதுபானத்தின் விலையைக் குறைக்கப் போகிறோம். இதை நான் உங்களுக்கு வாக்குறுதியாகவே அளிக்கிறேன்” என்றார். இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று மது விலை குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் குப்பம் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது அவர் பேசுகையில், “அனைத்து பொருட்களின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டன.. குறிப்பாக மதுபானங்களின் விலை எங்கோ போய்விட்டது. . நான் எனது பேச்சில் மதுபானங்கள் விலை குறித்துப் பேசினாலே இளைஞர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். மதுபானங்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். 60 ரூபாயிலிருந்த மதுபானங்களின் விலையை ரூ. 200க்கு உயர்த்திவிட்டார். அதில் 100 ரூபாயை அவர் தனது பாக்கெட்டிற்கு வருவது போலச் செய்துவிட்டார்” என்றார்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு 2019-20ல் ரூ.17,000 கோடிக்கு மேல் கலால் வரி வசூலித்து இருந்தது. ஆனால், அது 2022-23ல் அது சுமார் ரூ.24,000 கோடியாக அதிகரித்தது. ஆந்திராவிலும் தமிழகத்தைப் போலவே அரசுக்குச் சொந்தமான கடைகள் மூலமாக மட்டுமே மதுபான விற்பனை செய்யப்படுகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அரசு தரமற்ற மதுபானங்களை விற்பனை செய்வதாக சந்திரபாபு நாயுடு ஏற்கனவே பல முறை குற்றஞ்சாட்டியிருந்தார். தரமற்ற மதுவைக் கொடுக்கும் அதே நேரத்தில் விலையை மட்டும் உயர்த்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் லாபமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு உடன் கூட்டணி அமைத்துள்ள ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் இதே விவகாரத்தை எடுத்துப் பேசியுள்ளார். அவர் போட்டியிடும் பிதாபுரத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விற்கும் மதுவைத் தொடர்ந்து குடித்தால் மக்கள் நோய்வாய்ப்படுவார்கள். நடிகர் ஜெகன்மோகன் ரெட்டி மது விற்பனை மூலம் ரூ.40,000 கோடி கொள்ளையடித்துள்ளார். மேலும், மது வாங்க டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்க மறுக்கிறார்கள். அதற்கான காரணமும் தெரியவில்லை. பணம் எங்கே போகிறது.. ஒட்டுமொத்த மது விற்பனையில் 74 சதவிகித மதுவை வெறும் 16 நிறுவனங்கள் சப்ளை செய்கிறது. அது ஏன் என்பதும் புரியவில்லை” என்று அவர் தெரிவித்தார்.