ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்ற கருத்தை வாடிகன் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் நடைமுறை ஆகியவை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் அறிவித்துள்ளது. மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறும் செயல் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட இந்த அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் வெளியிட்டுள்ளது. பாலின கோட்பாடு அல்லது ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்ற கருத்தை வாடிகன் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
‘ஆணையும் பெண்ணையும் கடவுள் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார். அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னை கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது. ஒரு நபரின் பாலினத்தை மாற்ற முயற்சிப்பது, கருத்தரித்த தருணத்திலிருந்து அவர் பெற்ற தனித்துவமான கண்ணியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என வாடிகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.