இத்தேர்தல் வட இந்திய ஆரிய கும்பலுக்கும், தமிழருக்குமான போர்: திருமுருகன் காந்தி!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரச்சாரம் செய்ய சென்ற மே 17 இயக்கத்தினரை பாஜகவினர் தடுக்க முயல்வதாக அதன் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றாக, அதிக பரபரப்பு காணப்படும் தொகுதிகளில் ஒன்றாக கோவை உள்ளது. கோவை லோக்சபா தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து உள்ளது. கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார். இங்கே தினமும் பிரச்சாரம் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் சார்பாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்தான் கோவையில் பிரச்சாரம் செய்ய சென்ற மே 17 இயக்கத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். இதன் நிறுவனர் திருமுருகன் காந்தி இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், கோவையில் பரப்புரையை தடுக்க பாஜகவினர் குவிகின்றனர். பரப்புரை வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டு மிரட்டும் கூட்டத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டு பரப்புரையை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். எமது ஊரில், எமது நாட்டில் எம்மை மிரட்ட எவனும் பிறக்கவில்லை. வீதியில் எதிர்கொள்வோம் பாசிச கும்பலை. பாஜக கும்பலுக்கு ஆதரவாக வந்த காவல்துறையை வாதிட்டு ஒதுக்கி நிறுத்திவிட்டு பரப்புரை வாகனத்தை நிறுத்தி உரையாற்ற ஆரம்பித்துள்ளோம். நேரில் வந்த பாஜக மாவட்ட பொறுப்பாளரையும், பாரத் மாதாகீ ஜே என முழக்கமிட்ட கும்பலை ‘ ஜெய் பீம்!’, ‘பெரியார் வாழ்க!’, ‘ தமிழ்நாடு தமிழருக்கே!, வெளியேறு வெளியேறு, வட நாட்டானே வெளியேறு!!’ என்கிற முழக்கத்தோடு தோழர்கள் விரட்டியடித்தனர்.

பரப்புரை நடக்கிறது, காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. பாஜக கும்பல் குவிந்து கொண்டிருக்கிறது. எதற்கும் அஞ்சாமல் பரப்புரை நடக்கிறது. தோழர் குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயக கட்சியின் அபு, தமிழ் சிறுத்தைகளின் அகத்தியன் ஆகியோர் உடனிருக்கிறார். எதற்கும் அஞ்சப்போவதில்லை. இது பெரியார், பிரபாகரன், அண்ணலின் வழி வந்த படை. எதிர்த்து நிற்போம். துணிந்து வெல்வோம். சிதம்பரம் தொகுதியில் இரு நாள் பரப்புரை முடித்து கோவையில் பரப்புரை தொடங்குகிறோம். கடந்த எட்டு நாட்களில் 40க்கும் மேற்பட்ட கூட்டங்களில், 20க்கும் மேற்பட்ட ஊர்களில் பரப்புரை முடித்திருக்கிறோம். போகுமிடமெல்லாம் மோடி எதிர்ப்பை பார்க்க முடிகிறது. 2021க்கு பின்னரும் பாஜக-மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை தோழமை அமைப்புகள் தொடர்ந்திருந்தால் மோடியால் ‘Road show’ செய்திருக்க இயலாது.

மே17 இயக்கம் மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை கடந்த வருடம் நடத்திய போது, அரசு விழாவிற்கு வருகிறவருக்கு எதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என சில தோழர்கள் முணுமுணுத்தனர். இதன் விளைவை இன்று பார்க்கிறோம். பாஜக-ஆர்.எஸ்.எஸ்சுக்கான எதிர்ப்பு போராட்ட அரசியலை கோவையில் தபெதிக தோழர்.கு.இராமகிருட்டிணன் தொடர்ந்து முன்னகர்த்தி வருவதால், பிற கொங்கு நகரங்களை விட கோவையில் பாஜக எதிர்ப்பு அணி என்பது உயிர்ப்புடன் உள்ளது. இதுபோன்ற கூட்டுச்செயல்பாடுகள், களப் போராட்டங்கள் பிற பகுதிகளிலும் தொடர்ந்திருக்குமெனில் பாஜகவை எதிர்கொள்வது 2019 தேர்தலைப் போல எளிதாக அமைந்திருக்கும். கோவை நகரத்தில் அதிகாரிகள் உட்பட சங்கிகளாக மாறிப்போன சூழல் அங்கே உண்டு. இச்சூழலில் பாஜக எதிர்ப்பு பரப்புரையை தீவிரமாக நாம் மேற்கொண்டாக வேண்டும். கடந்த 6 நாட்களாக மே17 தோழர்கள் பரப்புரை மேற்கொண்டுள்ளனர். சில இடங்களில் சங்கிகள் செய்ய முயன்ற குழப்பங்களை கடந்து பரப்புரை நடந்து வருகிறது. நான் இன்று முதல் கோவையில் பரப்புரையில் இணைகிறேன். விருப்பமுள்ள தோழர்கள் இணைந்து கொள்ளலாம்.

தென்சென்னை, கோவை, உதகை, திருச்சி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் மே17 தோழர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். விருப்பமுள்ளவர்கள் கைகோர்த்து பரப்புரையை தீவிரப்படுத்தலாம். சிதம்பரம் தொகுதிக்கும், புதுக்கோட்டைக்கும் தோழர்கள் பங்களிப்பு தேவைப்படுகிறது. அதிமுக இப்பகுதியில் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் மிக மோசமானவர்கள் மட்டுமல்ல, பெருமளவில் பணத்தை வாரி இறைத்துக்கொண்டுள்ளனர். திருச்சி-புதுக்கோட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளர் மணல் மாபியாவாக இருப்பவர், பல கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அப்பகுதி மக்களே தெரிவித்தனர். சிதம்பரம் தொகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனியாக களமிறக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து இந்து-முஸ்லீம் பிரிவினையை தீவிரப்படுத்தும் வகையிலான கலவரத்தை தூண்டும் புத்தகங்களை விநியோகித்திருக்கின்றனர். இதை கண்டறிந்த தோழர்கள் சிலர் அக்கலவர கும்பலை பிடித்து ‘கவனித்து’ அனுப்பி உள்ளனர். இதுபோல பல குழுக்கள் தொகுதி முழுவதும் இறக்கி விடப்பட்டுள்ளது. தோழர்.திருமா, தோழர்.துரை.வைகோ போன்றவர்களை குறிவைத்து குழுக்கள் இயங்குகின்றன. தீவிர இந்துத்துவ எதிர்ப்புணர்வு கொண்டவர்களை அப்புறப்படுத்த தனியே பாஜக கவனம் செலுத்துகிறது. பலர் நினைப்பதுபோல இத்தேர்தல் 2019 ஆண்டு தேர்தலைவிட முற்றிலும் மாறுபட்டுள்ளது. பாஜக-ஆர்.எஸ் எஸ் ஊடுறுவல் அதிகாரிகளின் துணையோடு நடந்து வருகிறது. அதிமுக பணத்தை நம்பி இயங்குகிறது. இத்தேர்தலை மாநிலத்தேர்தல் போல மடைமாற்றுகிறது. மோடியின் திட்டங்கள் குறித்து ஏதும் பேசாமல், விவாதிக்காமல் மடைமாற்றி பாஜகவை பாதுகாக்கும் பரப்புரையை செய்கின்றனர்.

பாஜகவின் முக்கிய வேட்பாளர்களான அண்ணாமலை, தமிழிசை, முருகன் ஆகியோருக்கு தனியே முக்கியம் கொடுத்து மோடி நேரடியாக இயங்குகிறார். பாஜகவின் கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக, அமமுக, த.மா.கா கட்சிகளை கரைத்து ஜீரணிக்கும் முயற்சிகளை களத்தில் காணலாம். தாமரையை தலையில் தூக்கிவைத்து பரப்புரை செய்யும் இக்கட்சிகள், தேர்தலுக்கு பின் மோடி வெற்றிபெற்றால் காணாமல் போகுமளவு பாஜக செயல்படும். பாஜகவுடன் 10 ஆண்டு கூட்டணி வைத்த பாமக, களத்தில் தமக்கான ஆதரவு தளத்தை இழந்துகொண்டு வருவது மட்டுமல்ல, பாஜக அக்கட்சியை ஊடுருவி செயல்படுகிறது. எதிர்க்கட்சிகளைவிட பாஜகவால் கூட்டணி கட்சிகளே சிதைந்து போயின. தமிழ்நாடு இத்தேர்தலால் பலவகையில் திசை திருப்பலுக்கும், மடைமாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் நிதானமாக ஊடுருவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. இத்தேர்தல் வட இந்திய ஆரிய கும்பலுக்கும், தமிழருக்குமான போர். இதில் பங்கேற்காமல் தவிர்த்தால் பல இழப்புகள் நமக்குண்டு, என்று திருமுருகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.