அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி, பாஜக காணாமல் போகும்: ஜெயக்குமார்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் களம் அனல் போல தகித்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரக் களத்தில் சூடான வாதங்கள் நடந்து வருகின்றன. நான்கு முனை போட்டி நிலவி வரும் நிலையில், அதிமுக – பாஜக இடையே வார்த்தை மோதல்கள் தடித்துள்ளன. நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். விமானத்தில் இருந்து வந்து இறங்கி ரோடு ஷோ நடத்தினால் மக்கள் ஓட்டு போட்டு விடுவார்களா? டெல்லியில் இருந்து அடிக்கடி தமிழ்நாடு வருகிறார்கள். வந்து என்ன பயன்? எத்தனை தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது. மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா? தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா? அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடியவர்கள். உங்கள் ஏமாற்று வேலை தமிழ்நாட்டில் எடுபடாது.” எனப் பேசி இருந்தார்.

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது ‘நரி ஒரு திராட்சை பழத்தை எட்டிப் பிடிக்க முயன்றுவிட்டு, பறிக்க முடியாததால் நரி அந்த திராட்சை பழம் புளிக்கிறது’ என்று சொல்வதைப் போல் உள்ளது. எடப்பாடி பழனிசாமியை ரோடு ஷோ செல்ல சொல்லுங்கள், அதில் எத்தனை பேர் வருவார்கள். எத்தனை பேர் அவர்களுக்காக வருவார்கள் என்பது தெரியும். அவர்கள் வீதியில் வந்தால் மக்கள் யாரும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. அதனால் மக்களை அழைத்து சென்று பட்டியில் அடைத்து வைத்து, எழுதி வைத்து படிப்பதை கேட்க வைக்கிறார்கள். பிரதமர் மோடி நடத்திய ரோடு ஷோவை எடப்பாடி பழனிசாமி நடத்த வேண்டியதுதானே? அப்படி நடத்தினால் மக்கள் வரமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்.” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார், “அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி. அரசியலில் கத்துக்குட்டி. தேர்தலில் போட்டியே திமுகவும் அதிமுகவுக்கும் இடையே தான். அதனால் நானும் தேர்தல் போட்டியில் இருக்கிறேன் என்பதற்காக நானும் ரவுடிதான் என்ற பாணியில் அதிமுகவை அண்ணாமலை சீண்டி வருகிறார். என்னையே தோற்கடிச்சிட்டாங்க: தமிழ்நாட்டில் தனியாக நின்று பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ சீட்டு வெல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியுமா? பாஜகவுடன் 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைத்ததால் தான் அந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. பாஜக கூட்டணியால்தான் இதுவரை தோல்வியே காணாத நான் 2021 சட்டசபை தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தேன். ஒரு அண்ணாமலை அல்ல.. ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு பாஜக காணாமல் போகும்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.