ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பாஜக பிரமுகர்: அதிமுக கண்டனம்!

திருப்பூரில் ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தாக்கிய பாஜக பிரமுகர் சின்னசாமி மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பாஜவை அதிமுக மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. கட்சியில் முழுக்க ரவுடிகளையும் தேடப்படும் குற்றவாளிகளையும் சேர்த்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவது தான் உங்கள் மாற்று அரசியலா? என அதிமுகவின் எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் கடைக்குள் புகுந்து பாஜக தொண்டர்கள் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டணத்தை பெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் ரெடிமேட் கடை நடத்தும் சங்கீதா என்பதும் அவர் மீது தான் பாஜகவினர் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ள நிலையில் அதன் பின்னணி வெளியாகியுள்ளது. திருப்பூர் ஆத்துப்பாளையத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த பாஜகவினரிடம் சங்கீதா ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்பினார். பிரச்சார வாகனத்தை மறித்து ஜி.எஸ்.டி. வரி குறித்து கேள்வி எழுப்புவதா என்று கூறி பாஜகவினர் தகராறு செய்தனர். கேள்வி எழுப்பிய தன்னை தரக்குறைவாக பாஜக நிர்வாகிகள் திட்டியதால் வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண்ணை பாஜகவினர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு சங்கீதா புகார் தெரிவித்தார். மேலும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தன்னை மட்டும் தாக்கியதாகவும் சங்கீதா போலீசில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பெண்ணை தாக்கியதாக போலிசார் பாஜக பிரமுகரான சின்னசாமி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியும், முன்பு கூட்டணி இருந்த அதிமுக கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அப்பெண் தாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து, “கட்சியில் முழுக்க ரவுடிகளையும் தேடப்படும் குற்றவாளிகளையும் சேர்த்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவது தான் உங்கள் மாற்று அரசியலா? என் மண், என் மக்கள் உங்களை கேள்வி கேட்டால் இப்படி தான் அடிதடியில் ஈடுபடுவீர்களா? அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் மட்டுமே சித்தாந்தமாக வைத்திருக்கும் நீங்கள், எங்கள் கொள்கையை கேள்வி கேட்க என்ன அருகதை இருக்கிறது? மக்களின் கேள்விகளுக்கு பதில்சொல்ல திராணியின்றி அராஜகத்தில் தான் ஈடுபடுவீர்கள் எனில், மக்களுடைய கேள்விகளை @AIADMKOffcial அனைத்து வெளிகளிலும் கேட்கும்!

GST வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தம் வேண்டும் என்பது தொழில்துறையினரின் நீண்டநாள் கோரிக்கை. அதனை கேள்வியாக கேட்பதில் என்ன தவறு? அடாவடித்தனம் என்று வந்துவிட்டால் நீங்களும் திமுகவும் ஒன்று தான். நீங்க இருவருமே தமிழ்நாட்டுக்கு விரோதமான தீயசக்தி. மக்களே- வருகின்ற 19ஆம் தேதி இவர்களை ஜனநாயக முறைப்படி நாம் அனைவரும் #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!” என பதிவிடப்பட்டுள்ளது.