அதிமுக பிரச்சார கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியாத நபர் அதிமுகவை ஒழிப்பேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளதாகச் சாடினார்.
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் பிரச்சார களம் சூடு பிடித்து இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக கூட்டணியில் பயணித்து வந்த பாஜக, இந்த முறை தனது தலைமையில் கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் இப்போது தமிழகத்தில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் அதிமுகவினர் பெரியளவில் பாஜகவை விமர்சிக்காமல் இருந்தனர். இதனால் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மறைமுகமாகக் கூட்டணி இருப்பதாக திமுகவினர் கூற ஆரம்பித்தனர். இதையடுத்து இப்போது அதிமுக தலைவர்கள் பாஜகவை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேரடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையாகச் சாடி பேசினார். சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இன்னொருவர் புதிதாக வந்துள்ளார். அவர் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அவர் 2024இல் அதிமுகவை ஒழிக்கிறாராம். தம்பி, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. உங்கள் பாட்டனையே பார்த்த கட்சி. உன்னைப் போல ஏகப்பட்ட பேர் கொக்கரித்தார்கள். ஆணவ திமிரில் இப்படிப் பேசாதே.. அதிமுக என்ற ஒரு கட்சி இல்லையென்றால் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருக்காது.
ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெறவும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவும் தான் எம்ஜிஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். கண்ணை இமை காப்பது போல ஜெயலலிதா இந்த இயக்கத்தைப் பாதுகாத்து ஆட்சியையும் பிடித்தார். தமிழ்நாட்டில் அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சி செய்த காரணத்தினால் பல நன்மைகளைத் தமிழக மக்கள் பெற்றுள்ளனர். இந்த கட்சியையா அழிக்கப் பார்க்கிறாய் நீ.. முடிஞ்சத பார்..
1998இல் ஊர் ஊராகத் தாமரை சின்னத்தை எடுத்துச் சென்றதே அதிமுக தான். அப்போது தாமரை சின்னம் என்றால் எந்தக் கட்சி என்று கூட தெரியாமல் இருந்தது. அப்போது லோக்சபா தேர்தலில் பாஜக உடன் ஜெயலலிதா கூட்டணி வைத்தார்கள். அப்போது அதிமுகவினர் தான் ஊர் ஊராகச் சென்று இது தான் பாஜகவின் சின்னம் என்று கொண்டு சேர்த்தார்கள். அப்படி இருந்த கட்சி இன்று நம்மை அழிக்கப் பார்க்கிறார்களாம். நீங்கள் எல்லாம் நியமனம் செய்து பொறுப்பிற்கு வந்தவர்கள். மத்திய தலைவர்கள் நியமனம் செய்ததால் தலைவராக மாறியவர்கள் தான் நீங்கள். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் மாற்றப்படலாம். ஆனால், அதிமுகவில் உழைக்கும் நபர் தான் தலைவராக வர முடியும். கிளை செயலாளராக இருந்த நான் படிப்படியாக முன்னேறி முதல்வராக ஆனேன். ஆனால் அங்கே டெல்லியில் நினைத்தால் போதும் தலைவராகிவிடலாம்..எப்படி ஐபிஎஸ் ஆனீர்களோ.. அதேபோல நியமன பொறுப்பில் வந்தவர் தான் நீங்கள். எனவே கொஞ்சம் கவனமாகப் பேசுங்கள்.
500 நாட்களில் 100 திட்டங்களை நிறைவேற்றுவேன் என்கிறார்.. ஏன் இத்தனை நாட்களில் எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல.. ஒரு எம்எல்ஏ, எம்பியாக கூட ஆக முடியவில்லை.. நீ வந்து அதிமுகவை ஒழிப்பியா.. எப்படி எல்லாம் பேசுகிறார் பாருங்கள். பதவி வரும் போது பணிவு வர வேண்டும் என்று எம்ஜிஆர் பாடல் ஒன்று இருக்கும். ஆனால், அது உங்களிடம் இல்லை. தலைக்கனத்தில் ஆட வேண்டாம். அது எப்போதும் நிலைக்காது. மரியாதை கொடுத்துப் பேசுங்கள். அது அவர்களிடம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.