கரூர் மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட 6 இடங்களில் வாக்காளர் களை அடைத்துவைத்து, பணம்விநியோகிக்க ஏதுவாக பட்டிஅமைத்திருப்பதாக அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகார் அளித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கரூர் மக்களவைத் தொகுதியில் 6 இடங்களில் மனிதர்களை அடைத்து வைக்கும் வகையில் பட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளோம். பட்டி அமைத்தால் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதியைப் பெற்றே அமைக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதிகள் தெரிவிக்கின்றன. எனவே, அனுமதியின்றி பட்டி அமைத்தது ஏன்? ஈரோடு இடைத்தேர்தலில் நடைபெற்றது போல, கரூரிலும் நடைபெறலாம். இதற்கான அனுமதி புழல் சிறையில் இருந்து வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
கரூரில் லாரிகள் மூலம் மணல்அள்ளி விற்பனை செய்து, அதன் மூலம் தேர்தல் செலவுகளை கவனித்து வருகின்றனர். பிரச்சாரத்தின்போது ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டு, பட்டுப் புடவை, செலவுக்கு பணம் ஆகியவை விநியோகிக்கப்படுகின்றன. இதற்கான ஆதாரத்தையும், புகாருடன் இணைத்து வழங்கியுள்ளோம்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கடந்த 15 நாட்களாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து வருகிறார். அவருக்கு உரிய பாதுகாப்பை தமிழக காவல்துறை வழங்கவில்லை. இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு செல்லும் தனியார்பேருந்துகள் மூலம் வாக்காளர்களை அதிக அளவில் அழைத்துச்சென்று, பணம் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளோம். கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு குறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆணையம் விளக்கம் கேட்டுள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக, சட்டப்பிரிவு இணைசெயலாளர் இ.பாலமுருகன் புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மகளிர் வாக்குகளைக் கவரும் நோக்கில், தற்போது ஏப்.6, மற்றும் 10-ம் தேதிகளில் தமிழக அரசின் முத்திரையுடன், ஆரணி தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மற்றும் அயலக தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெயரிலும் பதிவுத்தபால் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இது தேர்தல் விதிகளை மீறியதாகும். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செஞ்சி மஸ்தான், வேட்பாளர் தரணி வேந்தன் மீதும் புகார் அளித்துள்ளோம். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். மகளிரின் வாக்குகளை அவர்களை திசைதிருப்பி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கடிதத்தில், இலவச பேருந்து பயணம், மகளிர் உதவித்தொகை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு முத்திரையை பயன்படுத்தியது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.