நான் பாஜகவால் தான் தேர்தலில் தோற்றேன்: ஜெயக்குமார்

“25 வருடம் ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன். தோல்வி என்பதே அறியாதவன் நான். யாரால் தோற்றேன் என்றால், பாஜகவால் தான் தோற்றேன்.” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

நான் மனம் திறந்து சொல்கிறேன். இதுவரை இதை சொல்லியதில்லை. 25 வருடம் ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன். தோல்வி என்பதே அறியாதவன் நான். யாரால் தோற்றேன் என்றால், பாஜகவால் தான் தோற்றேன். பாஜக இல்லையென்றால், நான் இந்நேரம் சட்டப்பேரவைக்கு சென்றிருப்பேன்.

பாஜக கூட்டணியில் இருந்ததால், எனது தொகுதியான ராயபுரத்தில் 40 ஆயிரம் சிறுபான்மையினர் மக்கள் வாக்குகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு என்மேல் எந்த கோவமும் இல்லை. தேர்தலில் நிற்கும்போதே பாஜகவை கழட்டிவிட்டு வரச் சொன்னார்கள் அம்மக்கள். ‘சமயம் வரும்போது கழட்டிவிட்டுவிடுவோம், நீங்கள் கவலைப்படாதீர்கள்’ என்று அவர்களை சமாதானப்படுத்தினேன். பாஜக இல்லையென்றால், 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெற்று இருப்பேன். இதுதான் காரணம். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க 2019 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் அதிமுக தோற்றது பாஜகவால் மட்டும்தான். இவ்வாறு அவர் கூறினார்.