இஸ்ரேலை நோக்கி ஈரான் சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை வீசி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘இது மிகுந்த கவலைக்குரிய விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு இந்தியாவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
இது மிகுந்த கவலைக்குரிய விஷயம். ஏனெனில் இந்த சம்பவம் ஒரு சூழ்நிலையின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது, இது நம் அனைவரையும் கவலையடையச் செய்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து நாங்கள் சில காலமாக கவலைப்பட்டு வந்தோம். இப்போது இந்தச் சம்பவம் மீண்டும் வருத்தமடைய செய்கிறது.
பிராந்தியத்தின் நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இப்போது நாங்கள் மக்களை இஸ்ரேல் மற்றும் ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். ஏற்கனவே அங்கு இருப்பவர்களிடம் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அதுதான் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். மேலும் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.