இந்தியாவில் தொடங்கிவிட்ட ராம ராஜ்ஜியத்தை யாராலும் தடுக்க முடியாது: ராஜ்நாத் சிங்

“இந்தியாவில் ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது, அதை யாராலும் தடுக்க முடியாது. ராம ராஜ்ஜியம் என்பது மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து, விழிப்புணர்வைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள பாசோலியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் ராமராஜ்ஜியம் தொடங்கிவிட்டது. அதை யாராலும் தடுக்க முடியாது. 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தல், ராமர் கோயிலைக் கட்டுதல், சிஏஏ உள்ளிட்ட பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி அமைப்பதற்காக அரசியல் செய்யவில்லை. மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் செய்கிறது. சிஏஏ அமலுக்குப் பிறகு இந்திய நாட்டவர் யாரும் குடியுரிமையை இழக்கப் போவதில்லை.

எங்களுடைய ஆட்சி அமைந்தாலும், அமையாவிட்டாலும் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுவத்தின் மீதான தாக்குதலை நாங்கள் ஏற்க முடியாது. ராம ராஜ்ஜியம் தொடங்கிவிட்டது, அது நிஜமாவதை யாராலும் தடுக்க முடியாது. ராம ராஜ்ஜியம் என்பது மக்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து, விழிப்புணர்வைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது

மக்கள் தங்கள் கடமைகளை உணரும் சூழ்நிலை நாட்டில் உருவாகி வருகின்றது. அரசாங்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கடமைகளைப் பொறுப்புடன் செய்யும்போது, ​​அது மக்களிடையே மெல்ல மெல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும். நரேந்திர மோடி அரசாங்கத்தைப் பொறுத்த வரையில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி வருகிறது என்பதை இந்தியா மட்டுமல்ல, உலகமே ஒப்புக்கொள்கிறது. இந்தியாவின் இமேஜும் மிகவும் மேம்பட்டுள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.