லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் மோடியை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கப் போகிறார் என்று கொங்கு நாடு தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் நாளை புதன்கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. பிரச்சாரம் முடிய இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். இதனால் பிரச்சார களம் அனல் பறக்கும் வகையில் இருக்கிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர் மணியை ஆதரித்து அந்தக் கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பிரச்சாரம் செய்தார். பாஜக மற்றும் அதிமுகவைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, மோடியை ஆதரிக்கப் போகிறார் என்றும் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்.
தர்மபுரி மாவட்டம் அரூரில் இந்தியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அங்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இப்போது தேர்தல் என்பதால் சும்மா பாஜகவும் அதிமுகவும் தனித் தனியாக இருப்பது போலக் காட்டிக் கொள்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மோடியை ஆதரிக்கப் போகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக பங்கு முக்கியம். இருவரும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இரு தரப்பும் கொண்டு வந்தார்கள். இதனால் தான் தமிழ்நாடு மேலே வந்தது. அப்படி வளர்ந்த மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டை மோடி திட்டமிட்டு கீழே தள்ளப் பார்க்கிறார். இந்த மோடியைத் தான் அதிமுக மறைமுகமாக ஆதரிக்கிறது. எனவே மோடியை வீழ்த்த அதிமுக தொண்டர்களும் நம்மோடு கைகோர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.