பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26-ல் தீர்ப்பு!

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஏப்.26ம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு எதிராக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையை பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் குற்ற வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து ஏப்ரல் 26ம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்காமல், தாமாக முன்வந்து விசாகா குழு விசாரணை நடத்த முடியாது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்தனர்.