நாடு முழுவதும் தீவிர சோதனையில் ரூ.4,658 கோடி பணம், பொருள் பறிமுதல்: தேர்தல் ஆணையம்!

மக்களவை தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நாடு முழுவதும் ரூ.4,658 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிக அளவிலான பணம், தங்கம் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 13-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ரூ.395.39 கோடி ரொக்கம், ரூ.489.31 கோடி மதுபானங்கள், ரூ.2,069 கோடி போதைப் பொருட்கள், ரூ.562.10 கோடி தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், ரூ.1,142.49 கோடி பரிசுப் பொருட்கள் என மொத்தம்ரூ.4,658 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த 2019 மக்களவை பொதுத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3,475 கோடியைவிட அதிகம். பறிமுதல் செய்ததில், 45 சதவீதம் போதை பொருட்கள். இவற்றின் மதிப்பு ரூ.2,069 கோடி. இது ஆணையத்தின் சிறப்பு கவனத்தின் கீழ் உள்ளது.

அதிக அளவில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வகையில், முதல் இடத்தில் ராஜஸ்தான் (ரூ.778.52 கோடி), 2-ம் இடத்தில் குஜராத் (ரூ.605.33 கோடி) ஆகிய மாநிலங்களை தொடர்ந்து, தமிழகம் ரூ.460.84 கோடியுடன் 3-வது இடத்தில் உள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்பேரில், பல்வேறு முகமைகள் இணைந்து செயல்பட்டதால், ஜனவரி, பிப்ரவரியில் நாடு முழுவதும் பணம், மதுபானம், மருந்துகள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் இலவசங்கள் வடிவில் மொத்தம் ரூ.7,502 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஜனவரி முதல் இதுவரை ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்து, முக்கிய தலைவரின் வாகனங்களை சோதனை செய்வதில் மெத்தனமாக இருந்ததாக பறக்கும் படை அதிகாரியை ஆணையம் இடைநீக்கம் செய்தது. நடத்தை விதிகளை மீறி, பிரச்சாரத்தில் அரசியல்வாதிகளுக்கு உதவிய 106 அரசு ஊழியர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சி-விஜில் செயலி மூலம், பணம், இலவச பொருள் விநியோகம் குறித்து 3,262 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.