நாட்டின் அணு ஆயுதங்களை அழிப்போம் என கூறும் மார்க்சிஸ்ட் உடன் காங்கிரஸ் கூட்டா?: ராஜ்நாத்!

நாட்டின் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

கேரளாவின் காசர்கோடு நகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

நாட்டின் அணு ஆயுதங்கள், ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்கள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியாவின் அணு ஆயுதங்களைத் தகர்க்கும் இந்த வாக்குறுதியின் பின்னணியில் உள்ள உள்நோக்கம் என்ன? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தியாவின் அணு ஆயுதங்களை அழிப்போம் என கூறுவது நாட்டின் பாதுகாப்போடு விளையாடுவதற்கு சமம். இத்தகைய வாக்குறுதியின் பின்னால், நாட்டை பலவீனப்படுத்த ஆழமான சதி இருக்கிறது. உலகின் 11 அணுசக்தி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதற்காக நமது நாடு கடுமையாக உழைத்தது. அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் அணுசக்தி சக்தி நாடுகளாக உள்ள நிலையில், நமது அணு ஆயுதங்களை அழிப்பது நாட்டை பலவீனப்படுத்தும். இடதுசாரிகளும் காங்கிரஸும் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவில் ராமரை எதிர்த்தவர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு அதுதான் நேர்ந்துள்ளது. இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ராமர் அல்லது ராம நவமியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ராம நவமியை கொண்டாடுவதில் தடைகளை உருவாக்கியுள்ளனர். ராமரை எதிர்த்தவர்கள் நாட்டில் வீழ்ச்சியை சந்தித்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுதான் காங்கிரசுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸட் கட்சிக்கும் நடந்துள்ளது.

நாட்டிலேயே மிகவும் நம்பகமான அரசியல் கட்சியாக இருக்கும் பாஜகவின் வார்த்தைகளிலும் செயலிலும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேச்சும், செயலும் வேறு வேறு. மக்களவைத் தேர்தலில் கேரளாவில் இருந்து பாஜக இரட்டை இலக்க இடங்களில் வெற்றி பெறும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.