பெண்கள் நாட்டின் கண்கள் என்ற திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கொட்டும் முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி பந்தல்குடி, ஆத்திபட்டி ஜெயராம் நகர், நாடார் சிவன் கோவில் பகுதிகளில் தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
விஜயபிரபாகரன் வெற்றி பெற்று வந்தவுடன் நாடாளுமன்ற தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளது. அ.தி.மு.க கூட்டணி மகத்தான கூட்டணி. எப்பொழுது வந்தாலும் கேப்டன் விஜயகாந்தோடுதான் வருவேன். தற்போது அவரில்லாமல் உங்களை சந்திக்கும் தருணம் வேதனையாக உள்ளது. ஆகவே அவரது மகன் விஜய பிரபாகரனே கேப்டனாக வந்துள்ளார்.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றி ரூ.500 கூலி கிடைக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார். பத்து வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் தொகுதி பக்கம் வரவே இல்லை. கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை . கேப்டன் விஜயகாந்தின் பிள்ளை உங்களுடன் ஒன்றாக இருந்து தாயா புள்ளையாக பழகி உங்களின் பிள்ளையாக இருந்து உங்களது கஷ்டங்களை புரிந்து அவற்றை சரி செய்யக்கூடிய ஒருத்தர்தான் விஜய பிரபாகரன்.
6 சட்டமன்ற தொகுதியிலும் ஒவ்வொரு இடங்களிலும் அலுவலகம் அமைத்து குறைகள் நிவர்த்தி செய்யப்படும். நாடாளுமன்ற நடக்கும் போது டெல்லியில் இருப்பார். மற்ற நேரங்களில் தொகுதியில் இருந்து மக்களுக்கு உதவி செய்வதுடன் தொகுதிக்கு வேண்டிய எல்லா திட்டங்களையும் செய்து விருதுநகர் தொகுதியை முதன்மையான தொகுதியாக கொண்டு வந்து, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து மேம்படுத்துவார். உங்களது வேட்பாளர் படித்தவர், இளைஞர், அறிவாளி சிறிய வயதில் பல சவால்களை சந்தித்தவர். பெண்கள் நாட்டின் கண்கள் என்கின்ற திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் ரூபாய் தொகுதி மக்களுக்கு வழங்கப்படும்.
கூடிய விரைவில் உங்களது ஆசீர்வாதத்துடன் அவருக்கு திருமணம் நடைபெறும். தொகுதி மக்களோடு இருந்து அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். நீங்கள் அனைவரும் கேப்டன் கண்டெடுத்த விஜய பிரபாகரனுக்கு வெற்றி சின்னமாம் முரசு சின்னத்தில் நான்காவது நண்பர் பட்டனில் அழுத்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.