மேகேதாட்டு அணை: முதல்வர் தெளிவுபடுத்த பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!

மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் கருத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்ற உடன், மேகேதாட்டுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், நீர்ப்பாசனத் துறை அமைச்சராக உள்ள துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் கூறி வருகின்றனர். மேலும், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆதரவான வகையில், கடந்த பிப். 1-ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி, அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாகவும், இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் மேகேதாட்டு அணை கட்டப்படும் என்றும் கர்நாடக துணை முதல்வர் டிகே.சிவக்குமார் தெரிவித்து உள்ளார். அப்படி அணை கட்டப்படுமேயானால் காவிரி டெல்டா அழிவை சந்திக்கும். ஒட்டுமொத்தமாக தமிழகம் பாலைவனமாக மாறும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, கர்நாடக துணை முதல்வர் கூறியுள்ளதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், தமிழக அரசுக்கு எதிராக, தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.கூறியுள்ளார்.