அடிச்சுவிடு.. நல்ல உருட்டவும்: அண்ணாமலையை கலாய்த்த காயத்ரி ரகுராம்!

கோவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருப்பதை அதிமுக மகளிர் அணி நிர்வாகியான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் தங்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இதனைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட வாக்காளர்கள் தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய தேர்தல் அதிகாரிகளிடமும் வாக்குவாதம் செய்தனர். வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை ராம் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், நூற்றுக்கணக்கான வாக்குச் சாவடிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் இதன் பின்னணியில் அரசியல் காரணம் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் குற்றம்சாட்டிய அண்ணாமலை, வாக்காளர்களின் பெயர்களை நீக்கி விட்டு வாக்குப்பதிவு நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்று தேர்தல் ஆணையத்தை சாடினார். வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக மகளிர் அணி துணை செயலாளரான காயத்ரி ரகுராம், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், பூத் ஏஜென்ட் இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்றும், ஆனால் 1 லட்சம் பேர் பட்டியலில் இல்லாத வாக்காளர்கள் என தோராயமாக சொல்கிறார் என்றும், அனைத்து பாஜக வாக்காளர்கள் பெயர் மட்டுமே விட்டு உள்ளது என்றும் அடிச்சு விடுகிறார், நல்ல உருட்டவும் எனவும் நக்கலாக விமர்சித்துள்ளார்.