திராவிட இயக்கத்தைப் பற்றி மோடிக்கு என்ன தெரியும்: வைகோ

பிரதமர் மோடி இந்தியாவை குடியரசு நாடாக மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் என்று வைகோ கூறினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவுபெற்ற நிலையில், அதற்கு முன்னதாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. 7 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 72.09 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தென்காசி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் வீடியோ வெளியிட்ட வைகோ, “சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த மக்களவைத் தேர்தல்களில் இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். நம் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியது ஆகும். இந்திய அரசியலின் போக்கில் பாராளுமன்ற ஜனநாய முறை நீடிக்குமா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா என்ற கேள்விக்கு இந்த தேர்தல் விடையாக அமையும். ஏனெனில் பிரதமர் மோடி இந்தியாவை குடியரசு நாடாக மாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். அவர் கொண்டு வந்த சட்டங்கள், திட்டங்களே அதற்கு சாட்சி” என்று தெரிவித்தார்.

திராவிட இயக்கத்தை அழித்தே தீருவேன் என பிரதமர் மோடி கூறி வருவதாக சுட்டிக்காட்டிய வைகோ, “திராவிட இயக்கத்தைப் பற்றி மோடிக்கு என்ன தெரியும். 1967 முதல் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள்தான் ஆட்சியில் உள்ளன. திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அப்படி அழிப்பேன் என்று சொன்னவர்கள் தான் இருந்த இடம் காணாமல் போயிருக்கிறார்கள்” என்று கூறினார். அத்துடன், திராவிட இயக்க வரலாற்றையும் விரிவாக எடுத்து வைத்தார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் காலை உணவுத் திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆட்சி காலத்தில் இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற காத்துக்கொண்டுள்ளார்.

பாஜகவோ சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும், தமிழுக்கு எதிரி. ஆனால், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக பிரதமர் மோடி இங்கு வந்து திருக்குறளைப் பற்றி பேசுகிறார். பாரதியாரை பற்றி பேசுகிறார். புயல் மற்றும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டபோது 10 நிமிடத்தை ஒதுக்கி பார்க்க பிரதமருக்கு மனமில்லையே. தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் நேசிக்கிறேன் என்று அவர் சொல்வாரேயானால் அப்போது அல்லவா வந்திருக்க வேண்டும். இப்போது ஏன் ஒன்பது முறை வருகிறார். ஆகவே, இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்” என்றும் கூறினார்.