3 புதிய கிரிமினல் சட்டங்கள் அவசியமானவை: தலைமை நீதிபதி சந்திரசூட்!

இந்தியாவில் கிரிமினல் சட்டங்களைத் திருத்தி 3 புதிய கிரிமினல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில், பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதியசாக் ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த 3 புதிய கிரிமினல் சட்டங்களும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், டெல்லியில் ‘‘கிரிமினல் குற்ற வழக்குகளில் நீதி வழங்குவதில் இந்தியாவின் வளர்ச்சி பாதை’’ என்ற தலைப்பில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது:-

இந்தியாவில் கிரிமினல் சட்டங்களைத் திருத்தி 3 புதிய கிரிமினல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. இந்த சட்டங்கள், இந்தியா மாறி வருகிறது என்பதற்கு தெளிவான அறிகுறியாக உள்ளன. இந்திய குற்றவியல் சட்டங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்கின்றன என்பதை இந்தச் சட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தற்காலத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும், இந்திய சமூகத்தின் எதிர்கால நலனுக்காகவும் புதிய சட்டதிட்டங்களை கொண்டு வரவேண்டிய அவசியம் உள்ளது. சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுத்தால், இந்த 3 புதிய சட்டங்களும் முழு வெற்றி பெறும். இந்தச் சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கும் பெரிதும் உதவியாக அமையும். இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.