ரயில்களில் கூட்டம் அதிகரித்து மிகுந்த நெரிசலுக்கிடையே பயணிகள் பயணிக்க வேண்டி இருக்கும் நிலையில், நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி எக்ஸில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட இட நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக ரயில்வே திணறி வருகிறது. மேலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிகின்றனர். இதனால் பல மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஏசி அல்லாத முன்பதிவு பெட்டிகளில் நடைபெற்று வந்த அன்ரிசவ்ர்டு பயணிகளின் ஆக்கிரமிப்பு தற்போது ஏசி கோச்சுகள் வரை நீண்டு இருக்கிறது. குறைந்த செலவில் நீண்ட தூர பயணம் என சிக்கனத்திற்காக ரயில் பயணம் மேற்கொள்ளும் சிலர் இது போன்ற மிகக் குறைந்த முன்பதிவு இல்லா பெட்டிகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தென் மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
மேலும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் வந்துவிட்ட பிறகு எற்கனவே இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இந்திய ரயில்வே முக்கியத்துவம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. எனவே ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரயில்களோடு புதிதாக கூடுதலாக பல ரயில்களை இயக்குவதே நெரிசலுக்கு தீர்வு தரும். அதே நேரத்தில் ரயில் நிலையங்களில் மட்டும் பாதுகாப்பு தருவதை நிறுத்திவிட்டு ரயில்களிலும் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் பயணிகள் புகார் தெரிவித்து வரும் நிலையில், ரயில்களில் நெரிசலுடன் பயணிக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகிவிட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி எக்ஸில் வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அந்த பதவில், “சாமானியர்களின் ரயில்களில் இருந்து ஜெனரல் கோச்சுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, ‘எலைட் ரயில்களை’ மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசில் ஒவ்வொரு வகுப்பு பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெற்ற பிறகும் மக்கள் தங்கள் இருக்கைகளில் வசதியாக உட்கார முடியாது; சாமானியர்கள் தரையிலும், கழிப்பறைகளிலும் பதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மோடி அரசு, அதன் கொள்கைகள் மூலம், ரயில்வேயை பலவீனப்படுத்தி, அதை ‘திறமையற்றது’ என்று நிரூபிக்க விரும்புகிறது, இதனால் அதை தனது நண்பர்களுக்கு விற்க ஒரு சாக்கு கிடைக்கும். சாமானியர்களின் பயணத்தை காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வேயை சீரழிப்பதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.