திருவனந்தபுரம்: ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்தை கூறி கேரளாவில் பிரச்சாரம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அண்ணாமலையின் பேச்சை கேட்டு கேரள மக்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. இதில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிட்டார். தனது தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பிற பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, கேரளாவில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக கேரளா சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அம்மாநிலத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த வகையில், முதல் நாளான நேற்று கொல்லம் தொகுதியின் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை ரோடு ஷோ நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-
காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி என எல்லா ஊழல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து, இண்டியா கூட்டணி என்ற பெயரில் நின்று கொண்டிருக்கின்றன. அந்தக் கட்சிகளின் தலைவர்களின் முகத்தை எல்லாம் பாருங்கள்.. மக்களுக்காக உழைக்கும் முகம் மாதிரியா தெரியுது? தாங்கள் கொள்ளையடித்த பணத்தையும், தங்கள் குடும்ப சொத்துகளையும் காப்பாற்றுவதற்காக தான் இந்த தலைவர்கள் அதிகாரத்திற்கு வர துடிக்கிறார்கள். இவ்வளவு பேசுகிறார்களே.. இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அவர்களால் அறிவிக்க முடியுமா? முடியாது. பிரதமர் வேட்பாளரை அறிவித்தால் இண்டியா கூட்டணி சிதறி போய்விடும். அவ்வளவு ஒற்றுமை அவர்களுக்குள். பிரதமர் வேட்பாளரை கூட அறிவிக்க முடியாத இவர்களா, நாளை நாட்டு மக்களை காப்பாற்ற போகிறார்கள்?
இதே மாதிரி தான் 2004-ம் ஆண்டு நடந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக என பல குடும்ப அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் தேர்தலில் நின்றது. மக்களும் ஓட்டு போட்டார்கள். ஆனால், வெற்றி பெற்று 10 நாட்களாகியும் பிரதமரை அவர்களால் அறிவிக்க முடியவில்லை. உலக நாடுகளே அன்றைக்கு இந்தியாவை பார்த்து சிரித்தது. 10 நாட்கள் கழித்து 10 பேர் வந்து நின்றார்கள். லாலு பிரசாத், பரூக் அப்துல்லா, கலைஞர் கருணாநிதி, பிரகாஷ் காரத் என அனைவரும் இருந்தார்கள்.
சரி.. யார் தான் பிரதமர் என்று கேட்டால், பின்னால் திரும்பி ஒருவரை கைகாட்டினார்கள். அவர் யாரென்று இந்திய மக்கள் யாருக்கும் அன்று தெரியவில்லை. மன்மோகன் சிங் அங்கு நின்று கொண்டிருந்தார். ரஜினியின் காலா படத்துல ஒரு வசனம் வரும் பாத்துருப்பீங்க. “ஏம்ப்பா குமாரு யாரு இவரு” என்று கேட்பதை போல தான் அன்று எல்லோரும் மன்மோகன் சிங்கை பார்த்து கேட்டார்கள். அந்த மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் அமர்ந்து இந்தியாவை 50 ஆண்டுகாலம் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார். அதே மாதிரி இப்போதும் நாட்டை பின்னாடி கொண்டு செல்ல அவர்கள் திட்டமிடுகிறார்கள். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.