எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடிய வட இந்தியர்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளை, கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தென் சென்னை, ஏ.பி. முருகானந்தம் போட்டியிடும் திருப்பூர். பால் கனகராஜ் போட்டியிடும் வட சென்னை, வினோஜ் செல்வம் போட்டியிடும் மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்குகள் வீதம் நீக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
தி.மு.க.வினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான திருட்டுத்தனத்தை, அயோக்கியத்தனத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார். எனவே, திருட்டுத்தனமாக, வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை வேண்டுகோளின்படி எந்தெந்த தொகுதிகளில் வாக்காளர்கள் கொத்துக்கொத்தாக நீக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் மீண்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.