சிறையில் உள்ள கெஜ்ரிவால், தனியார் மருத்துவருடன் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதி இல்லை என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டைப்-2 சர்க்கரை நோயாளியான அவர், தனது குடும்ப மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும் என டெல்லி ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, “மாம்பழம் உள்ளிட்ட அதிக இனிப்புள்ள உணவுப் பொருட்களை கேஜ்ரிவால் சாப்பிடுகிறார். இதனால் சர்க்கரை அளவு அதிகமானால் அதைக் காரணமாகக் கூறி ஜாமீன் பெற அவர் முயற்சிக்கிறார்” என அமலாக்கத் துறை வாதிட்டது. இந்த குற்றச்சாட்டை கெஜ்ரிவால் தரப்பு மறுத்தது.
இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி நேற்று பிறப்பித்த உத்தரவில், “கெஜ்ரிவால் தனியார் மருத்துவருடன் தினமும் 15 நிமிடம் காணொலி மூலம் ஆலோசனை பெற அனுமதிக்க முடியாது. அதேநேரம், கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்த வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும். சர்க்கரை நோய் நிபுணர்களைக் கொண்டு அவருக்கு சிறப்பான சிகிச்சை வழங்க சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.