ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம்: உணவு பாதுகாப்புத்துறை!

டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் தாவணகெரேவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன், கடுமையான வலி ஏற்பட்டு துடி துடித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்மோக் பிஸ்கட்களை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திரவ நைட்ரஜன் மூலம், தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட்கள் உயிருக்கு ஆபத்தானவை எனவும், அதீத குளிர் காரணமாக சுவாசப்பாதை, உணவுப்பாதையை உறைய வைத்துவிடும் என்பதால், திரவ நைட்ரஜன்களை உணவுப் பொருட்களோடு பயன்படுத்தக்கூடாது எனவும் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆய்வுக் கூடங்களில் பொருட்களை மிகவும் குளிர்ச்சியான சூழலில் பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் இந்த திரவ நைட்ரஜன் அறை வெப்ப நிலையில் வாயுவாக மாறும் தன்மை கொண்டது. இவற்றை கடைக்காரர்கள் வாடிக்கையாளர்கள், சிறுவர்களை கவர்வதற்காக ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் பீடா போன்ற பெயர்களில் சாப்பிடும் பொருட்களாக விற்பனை செய்கின்றனர்.

பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்கு, பொழுதுபோக்கு இடங்களில், ஸ்மோக் பிஸ்கட்டை வாங்கிக் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது. திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம். திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களில் படும்போது கடுமையான உறை பனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியானது. திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாய் சிதையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேசும் திறன் பறிபோகும் ஆபத்து உள்ளது, உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை யாரும் விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு விடுதிகளில் டிரை ஐஸை உணவுப்பொருளுடன் விற்கக்கூடாது. இந்த உத்தரவை மீறி யாரேனும் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், சென்னையில் கடைகளில் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.