மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே பொதுமக்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த ஆலையை மூடக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு சொந்தமான உரத்தொழிற்சாலை நிறுவனம் ஒன்று பல மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக ஆறு ஊர்களைச் சேர்ந்த கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். ஊர் எல்லையில் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலை கடந்த 8 மாதங்களாக செயல்படுகிறது. உரம் தயாரிப்பதாக கூறி அனுமதி பெற்று விட்டு கோழி மற்றும் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்தனர். இதன் காரணமாக கே.சென்னம்பட்டி, பேய்க்குளம் ஆகிய ஊர்களில் ஒரு வாக்குக் கூட பதிவாகவில்லை. அதிகாரிகள் பேச்சு நடத்தியதில் ஆலையை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என மக்கள் அறிவித்துவிட்டனர்.
இந்த சூழலில் ஆலையை உடனே மூட வேண்டும். தவறினால் மக்கள் போராட்டம் பெரிதாகிவிடும் என ஆட்சியருக்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டது. இந்நிலையில் மக்கள் போராட்டம் காரணமாக மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது. அங்கு கோழிக் கழிவுகள் 5 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன வசதி கொண்ட அறையில் சேமிக்கப்படுகின்றன. பின்னர் 5 டன் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் 40 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கப்பட்டு, புரோட்டின் பவுடராக பெறப்படுகிறது.
தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த 30 மீட்டர் உயரம் உள்ள புகைப் போக்கி உள்ளிட்ட சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. காற்று மாசு தடுப்பு சாதனங்கள் முறையாக இயக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. கோழிக் கழிவுகள் வேக வைக்கப்படும் இடம் தவிர மற்ற வெளிப்புறங்களில் துர்நாற்றம் எதுவும் உணரப்படவில்லை. கெமிக்கல் கழிவுகளோ, மருத்துவக் கழிவுகளோ இங்கு கையாளப்படவில்லை. விதிகளின்படி இயங்குகிறது” என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆலை மூடப்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் சேர்ந்து கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்ற கண்டன முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது,. இதனையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பி உதயகுமார், “சென்னம்பட்டி ஆவல்சூரன்பட்டி பேய்குளம் உள்ளிட்ட 30 கிராம மக்கள் அச்சுறுத்தும் இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை அளித்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே நான் கடந்த 5.9 .2023 அன்று இந்த தொழிற்சாலையை நிறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மனு கொடுத்தேன். மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை எங்கே வேண்டுமானாலும் மாற்றி கொள்ளட்டும். ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கக் கூடாது.. நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.