தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது. பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவார்கள் என்று வயநாட்டில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார்.
கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து அவரது சகோதரியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி நேற்று வயநாட்டில் தேர்தல் பிரசாரம் செய்தார். எடக்காராவில் நடந்த வாகன அணிவகுப்பில் கலந்துகொண்டார். அப்போது அவர் கட்சியினர், பொதுமக்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். பின்னர் வான்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள். பா.ஜனதா தினமும் எதிர்பாராத பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தவறு செய்வது யாராக இருந்தாலும், அவர்களை தண்டிப்பதற்கு ராகுல் காந்தி தயங்க மாட்டார். மக்கள் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை.
அத்தியாவசிய உணவு பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. அதை பொருட்படுத்தாமல் மக்களின் கவனத்தை பா.ஜனதா திசை திருப்பி வருகிறது. 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. உங்களது ஒவ்வொரு வாக்கும் நாட்டை பாதுகாப்பதற்கு உரியது என்ற எண்ணம் வேண்டும்.
தேர்தல் பத்திர திட்ட விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை நிலைப்பாட்டை கொண்டு உள்ளது. 2 மாநில முதல்-மந்திரிகள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பா.ஜனதா மிக பெரிய ஊழலை செய்துவிட்டு, அதனை நியாயப்படுத்தி வருகிறது.
தேர்தல் பத்திரம் திட்டம் மூலம் பல கோடி ரூபாயை பா.ஜனதா வசூலித்து உள்ளது. பல தனியார் நிறுவனங்களை மிரட்டி, ரூ.100 கோடிக்கு அதிகமான நிதியை திரட்டி உள்ளது. இதில் சில நிறுவனங்களுக்கு மூலதனம் கூட ரூ.100 கோடி இல்லாத நிலையில், இந்த தொகை எவ்வாறு வந்தது என்று நாம் சிந்திக்க வேண்டும். தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜனதாவுக்கு பணம் கொடுத்த நிறுவனங்கள், பல வழக்குகளில் இருந்து மத்திய அரசு தப்ப விட்டது. இறுதியாக சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு, தேர்தல் பத்திரம் திட்டம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறி ரத்து செய்ததால் நீதி நிலை நாட்டப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.