”எனது செல்போன் உரையாடல் ஒட்டுக் கேட்கப்படுகிறது” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டினார்.
சிவகங்கையில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிறுபான்மையினரைக் கவர, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஒருமுறை கூட முஸ்லிம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. இதில் தேர்தல் விதிமீறல் இல்லாததால் தேர்தல் ஆணையத்திடம் பிரதமருக்கு எதிராக மனு கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. மத அடிப்படையில் சிறுபான்மையினரை இணைத்தும், சாதிகள் அடிப்படையில் இந்துக்களைப் பிரித்தும் காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.
மொபைல்போன் உரையாடல் ஒட்டு கேட்பதாக எழுந்த புகாரில் உண்மை உள்ளது. இருபது நாட்களாக எனது மொபைல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு வருகிறது. அதனால் நான் மொபைலில் எந்த கலந்துரையாடலும் செய்வது கிடையாது.
கெஜ்ரிவால் மீதான புகாரில் உண்மை இருப்பதாக புதுடெல்லி உயர் நீதிமன்றமே கூறியநிலையில், அவருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பேசுவது ஏன்? புதுடெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த மதுபான ஊழல் வழக்கு, விரைவில் சென்னைக்கும் வரும். தமிழகத்தில் மதுபானம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் 4-க்கு பிறகு சிறைக்கு செல்வர். அதில் முதல்வர், அமைச்சர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. மணல் குவாரி முறைகேடு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பல உண்மைகள் தெரியும். உச்ச நீதிமன்ற உத்தரவுபடியே அவர்கள் அமலாக்கத் துறையிடம் ஆஜராகினர். இவ்வாறு அவர் கூறினார்.