ராஜ்நாத் சிங் பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி அப்பட்டமான பொய்களைக் கூறுவது தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கிய குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுடைய சொத்துகளைப் பகிந்தளித்துவிடும்’ என்று குறிப்பிட்டார். ‘நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், ‘இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகளைக் கொண்டுள்ளவர்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்றும் இந்துப் பெண்களின் தாலியைக் கூட காங்கிரஸ் விட்டு வைக்காது என காங்கிரஸின் தோ்தல் அறிக்கையை பிரதமர் மோடி விமர்சித்ததை அடுத்து அவரது பேச்சுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இதனிடையே, பிரதமரின் பேச்சுக்கு ஆதரவளிக்கும் விதமாக சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருந்தார்.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி அப்பட்டமான பொய்களைக் கூறுவது தனக்கு ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி அப்பட்டமான பொய்களைக் கூறுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காங்கிரஸ் மக்களின் சொத்துகளை கைப்பற்றி, ஊடுருவல்காரர்களுக்கு தரும் என தேர்தல் அறிக்கையில் எந்த பக்கத்தில் சொல்லி இருக்கிறோம்? தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அந்த கருத்தை நீங்கள் படித்தீர்கள்? என்று ராஜ்நாத்சிங்கை கேட்க விரும்புகிறேன். ஒருவேளை, கண்ணுக்குத் தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தை எதையாவது படித்தீர்களா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களைக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது.

தேர்தல் அறிக்கையில் செல்வத்தை மறுபகிர்வு செய்வது என்பது தொடர்பான ஒரு வார்த்தையை காட்டுங்கள். ஆனால் பாஜக கையில் இருக்கும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கண்ணுக்கு தெரியாத மையில் பேய்களால் எழுதப்பட்டது என நினைக்கிறேன். எங்களின் தேர்தல் அறிக்கை இந்தியா முழுவதும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. அதனால்தான் கற்பனைக் கதைகளை உருவாக்கி தாக்குதல் தொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.