ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 50 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் இருந்து 5 கி.மீ. பகுதியில் பெர்நோட் கிராமத்தில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென நிலப்பகுதி மூழ்க தொடங்கியுள்ளது. இதனால், சாலைகள் சேதமடைந்தன. 50 வீடுகள் பாதிக்கப்பட்டன. சாலைகளில் அடுத்தடுத்து விரிசல்கள் ஏற்பட்டன. இதனால், ஆயிரம் மீட்டர் முதல் 1,200 மீட்டர் வரை சாலை பாதிக்கப்பட்டது. இந்த விரிசலானது தொடர்ந்து கொண்டிருந்தது என பொறியியல் அந்தஸ்திலான அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில இடங்களில் 10 முதல் 12 மீட்டர்கள் வரை சாலைகளும் மூழ்கின. இது தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில், மறுசீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் கூறினர். நிலப்பகுதி மூழ்கியதில் பயிர்களும் பாதிப்படைந்து உள்ளன என கிராமத்தினர் கூறியுள்ளனர்.
அந்த கிராமத்தில் வசித்து வரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான கலாஷா தேவி கூறும்போது, இரவு 7 மணியளவில், சாலைகளில் முதலில் வெடிப்புகள் ஏற்பட்டன. இரவு 10 முதல் 11 மணி வரையில் ஓரடி வரை சாலை மூழ்கியது. எங்கள் முன்னாலேயே இது நடந்தது. இதில், 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன என வருத்தத்துடன் கூறினார்.