தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து வருகிறது: வைகோ!

தமிழகத்திற்கு வெள்ள நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசை வைகோ விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட இயற்கை பேரிடர், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளப் பாதிப்புகளை சீர் செய்ய 37,907 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்தது. எனினும், டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ளத்திற்கு ரூ.160.61 கோடியும் என மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு விடுவித்தது. தமிழக கேட்ட தொகையை விட மிக குறைவான தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு கேட்ட நிதியில், மத்திய அரசு ஒரு சதவீதத்துக்கு கீழே அதாவது 0.78 சதவீதம் மட்டுமே இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு வழங்கி உள்ளது. ஆனால். கர்நாடகாவிற்கு வறட்சி பாதிப்புக்காக 3498.82 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது. மக்களவைத் தேர்தலை குறி வைத்துதான் கர்நாடக மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது” என்று விவரித்துள்ளார்.

தமிழகத்தை பாஜக அரசு வஞ்சித்து வருவதாகக் குறிப்பிட்ட வைகோ, “கடந்த 9 ஆண்டுகளில் தமிழக அரசு மத்திய பாஜக அரசிடம் கேட்ட தொகை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 655 கோடி ரூபாய் ஆகும். ஆனால் மத்திய அரசு அளித்த தொகை வெறும் 5884.49 கோடி ரூபாய் மட்டும்தான். தமிழக அரசு கேட்ட தொகையில் வெறும் 4.6 சதவீதம் மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசு மத்திய அரசுக்கு வரியாக கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது என்றும், ஆனால் பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்துக்கு ஒரு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் 73 பைசா மத்திய அரசு வழங்குவதாகவும் குற்றம்சாட்டிய வைகோ, “சென்னை மெட்ரோ 2வது கட்ட பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகை 63,246 கோடி ஆகும். இதில் மத்திய அரசு 50% தமிழகத்துக்கு அளிக்க வேண்டும். ஆனால் இதுவரை 3273 கோடி ரூபாய் அதாவது திட்ட மதிப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது” என்றும் விமர்சித்தார்.

மேலும், “மாநிலங்களை நிதி நெருக்கடியில் தள்ளி நிதி தன்னாட்சியை சீர்குலைத்து வரும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 10வது நிதிக்குழுவில் இருந்த 6.64 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைத்து, 15 ஆவது நிதிக்குழுவில் 4.08 சதவீதமாக குறைத்துவிட்டது. அதிக வரி அளிக்கும் மாநிலமான தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி பகிர்வில் பச்சைத் துரோகம் இழைத்து வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி மக்களின் ஆதரவோடு வெற்றி ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி. அப்போது மாநிலங்கள் உரிமைகள் காப்பாற்றப்படும். நிதிப் பகிர்வில் தற்போதுள்ள பாரபட்சமான அணுகுமுறைக்கு முடிவு கட்டப்படும்” என்றும் அவர் கூறினார்.