பிகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர், புறப்படும்போது சற்று நிலை தடுமாறியது. நல்வாய்ப்பாக விபத்து ஏதும் நேரிடவில்லை.
பிகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது பாஜக. மொத்தம் உள்ள தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜகவும், 16 இடங்களில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியும் மற்ற இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிகாரின் பெகுசராய் நகரில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா.
இதன்பின் ஹெலிகாப்டர் மூலமாக அடுத்த பிரச்சாரத்துக்கு செல்லவிருந்தார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டார். ஆனால், ஹெலிகாப்டர் புறப்படும் முன் கட்டுப்பாட்டை இழந்து சற்றே நிலை தடுமாறியது. ஒரு கட்டத்தில் மேலே பறக்க முடியாமல், கீழே தரையை தொடும் அளவுக்கு சென்றதால் பதற்றம் நிலவியது. எனினும் சில விநாடிகளில் மீண்டும் வானத்தை நோக்கி பறந்து நல்வாய்ப்பாக விபத்தில் இருந்து தப்பியது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்து அமித் ஷா உள்ளிட்டோர் உயிர் தப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் “இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்கள்” என மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். இண்டியா கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், அமித் ஷா இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமராக இருப்பார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார். அதன் பின்னர் வாய்ப்பிருந்தால் ராகுல் பிரதமராவார். இண்டியா கூட்டணி சொல்வதைப் போல ஒரு நாட்டை இப்படியெல்லாம் நடத்த முடியாது. 30 ஆண்டுகளாக நிலையற்ற ஆட்சி நடைபெற்றதால், நாடு அதற்கான விலையை கொடுத்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வலிமையான தலைமை கிடைத்திருப்பதன் மூலம் கொள்கை, வளர்ச்சி திட்டம் ஆகியவற்றிலும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம். இவ்வாறு அமித் ஷா கூறினார்.