விஜயகாந்துக்கு மே 9-ல் பத்மபூஷன் விருது: பிரேமலதா!

தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பிரேமலதா கூறியதாவது:-

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்தது. வரும் 9-ம் தேதி தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்துக்கு டெல்லியில் பத்ம பூஷன் விருது வழங்க இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கடுமையாக வெயில் இருக்கும் பட்சத்தில் ஒரு வாரம் தாமதமாக பள்ளிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பே வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்வதைத் தவறவிட்டு, தேர்தல் அன்று தான் தனக்கு வாக்கு இருக்கிறதா என்பதை பலர் உறுதி செய்கின்றனர். சென்னையில் மிகக் குறைவான வாக்கு பதிவாகியுள்ளது. அனைவரும் வாக்களிக்கும் வகையிலான நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும். விருதுநகர் தொகுதியில் அனைத்து தரப்பினரும் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர்.

நீலகிரியில் வாக்குப்பெட்டி வைத்திருக்கும் அறையில் கண்காணிப்பு கேமரா 4 மணி நேரம் வேலை செய்யாமல் இருந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் மோடி கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். போதையில் காவலரையே தாக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதில் கவனம் செலுத்தி அரசு சட்ட ஒழுங்கை காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.