மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் நிதி மோசடிகளையும், கொலை மிரட்டல்களையும் அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதியை 9042457527 என்ற செல்பேசி எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர், மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். ” நீ ஒற்றை ஆள் தான். ஆனால், நாங்கள் லட்சக்கணக்கில் இருக்கிறோம். இனியும் எங்கள் நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டால் 2025-ஆம் ஆண்டில் நீ உயிருடன் இருக்க முடியாது. நீ என் கையில் மட்டும் கிடைத்தால் நானே உன்னை போட்டுத்தள்ளி விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். அதற்கு பயன்படுத்தப் பட்ட செல்பேசி எண் மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மை வி 3 ஆட்ஸ் நிறுவனம், வலைத்தளங்கள் வாயிலாகவும், வலைக்காட்சிகள் மூலமாகவும் பொதுமக்களைத் தொடர்பு கொண்டு ரூ.360 முதல் ரூ.1.20 லட்சம் வரை பணம் செலுத்தி உறுப்பினரானால் தாங்கள் அனுப்பும் விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது. அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இது வரை பல லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்திருக்கிறது. புதிதாக உறுப்பினராக சேருவோரிடமிருந்து பணம் வசூலித்து ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்களுக்கு பணம் வழங்கும் போன்சி(Ponzi) மாதிரி மோசடி இதுவாகும். இதில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உறுப்பினராகும் அனைவரும் ஒரு கட்டத்தில் பணத்தை இழக்கும் வாய்ப்புள்ளது.

இந்த மோசடியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பா.ம.க. மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கோவை ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்து அதனடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் ஆகியோரிடம் கடந்த பிப்ரவரி மாதம் புகார் மனு அளித்தேன். இதன் காரணமாகவே அசோக் ஸ்ரீநிதிக்கு மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தினர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய மிரட்டல்களுக்கு பா.ம.க. ஒருபோதும் அஞ்சாது.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாகவே நிதி நிறுவன மோசடிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளன. இதேபோன்ற மோசடி மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடமும் நடைபெறப்போவது உறுதி. அதைத் தடுப்பதற்காகத் தான் அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் புகார் அளித்திருக்கிறோம். மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் சக்தி ஆனந்தன் என்பவர் ஏற்கனவே வி3 ஆன்லைன் தொலைக்காட்சி நடத்தி மோசடி செய்தவர் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மை வி 3 ஆட்ஸ் நிறுவனம் மீதும், அதன் நிர்வாகிகள் மீதும் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ஆயிரக்கணக்கான புகார்கள் அளிக்கப்பட்ட பிறகும் கூட மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, அந்த நிறுவனத்தின் மோசடிகளுக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறது. அதனால் தான் பா.ம.க. மாவட்டச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்துள்ளது.

மோசடி நிறுவனங்களிடம் மக்கள் ஏமாறாமல் தடுக்க மை வி 3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பா.ம.க. மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த மை வி 3 ஆட்ஸ் நிறுவன நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். பா.ம.க. மாவட்ட செயலர் அசோக் ஸ்ரீநிதிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.